சென்னை, ஜூலை 10- நெல்லை இளம் தோழர் அசோக் படு கொலை தொடர்பான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமைக் குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிட்டு, சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் அறைகூவல் விடுத்தார். சென்னையில் புதனன்று (ஜுலை 10) நடை பெற்ற இந்நிகழ்வில் அவர் செய்தியாளர்களி டம் கூறியதாவது: தமிழகத்தில் சாதி வெறி சக்திகளால் படு கொலைகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. மாதத்திற்கு ஒரு கொலை, 10 நாட்களுக்கு ஒரு கொலை என சாதி ஆணவக் கொலைகளும் நடைபெறுகின்றன. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டப் பொருளாளர் எம். அசோக்கை கடந்த மாதம் 12ஆம் தேதி இரவு சாதி வெறியர்கள் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். தோழர் அசோக் படுகொலை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமைக் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜி.செல்வா தலைமையில் மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் டி.ஜெயக்குமார், திருநெல் வேலி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் கே.பழனி, திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர் பி.எம்.முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருநெல்வேலி மாவட்டத் தலைவர் பா.ராஜகுரு, பி.வரகுணன் (மனித உரிமை பாதுகாப்புக்குழு, திருநெல் வேலி) ஆகியோர் கடந்த மாதம் 21ஆம் தேதி நேரடியாக அப்பகுதிக்கு சென்று பல பேரிடம் 2 நாட்கள் விசாரணை செய்தனர்.
விசாரணை அறிக்கையில், கரையிருப்பு கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஏழு தலித், ஒரு மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் உள்ளிட்ட 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள னர். இந்த படுகொலையில் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கிறது. அந்த சமூகத்தை சேர்ந்த அனைவருமே குற்றவாளிகள் என மார்க்சிஸ்ட் கட்சி கூறவில்லை. 8 கொலைகள் நடந்த பின்னரும் ஒரு வழக்கில் கூட நீதிமன்றம் விசாரித்து தண்டனை வழங்கவில்லை. பல வழக்கு கள் இன்னும் நிலுவையிலேயே உள்ளன. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் தாமதப்படுத்துவது, விசாரணையை தாமதப்படுத்துவது, சாட்சி சொல்ல வந்தால் அவர்களை மிரட்டி கலைப்பது போன்ற செயல்களால் அந்த குற்றவாளிகள் தொ டர்ந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறார் கள். அசோக் படுகொலையில் சம்பந்தப்பட்ட வர்கள் மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்ய வேண்டும், சாட்சி களை முறைப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என காவல் துறையிடம் வலியுறுத்தி இருக்கிறோம். ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி அசோக்கும், அவரது தாயாரும் வயலுக்கு சென்று விட்டு மோட்டர் பைக்கில் வருகின்றனர். அப்போது அங்கு இரண்டு மோட்டார் பைக்கில் 6 பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். அசோக் ஹாரன் அடித்தும் அவர்கள் விலகாததால், அசோக் தாயாரின் மடியில் இருந்த புல் கட்டு நின்றிருந்தவர்களின் மேல் பட்டு கீழே விழுந்துள்ளது. உடனே அங்கிருந்த பேச்சிராஜா உள்ளிட்ட 6 பேரும் சேர்ந்து அசோக்கை தகாத வார்த்தைகளில் பேசி தாக்கியுள்ளனர்.
அசோக் தாக்கப்படுவதை தடுக்கச் சென்ற அவனது தாயாரை கீழே தள்ளி தாக்குகிறார்கள். அதில் வாயில் இருந்து ரத்தம் வழிகிறது. உடனே அசோக் தனது தாயாரை மருத்துவமனையில் அனு மதித்துவிட்டு, பேச்சிராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பேச்சிராஜாவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தலித் வகுப்பைச் சேர்ந்தவர் நம்மீது வழக்கு தொடுப்பதா என்பதுதான் அசோக் கொலைக்கு காரணம். தலித் வகுப்பைச் சேர்ந்தவர் இந்த நாட்டின் குடிமகன் கிடையா தா? அவருக்கு சட்ட உரிமையே கிடையாதா? இவர்கள் தாக்கினால் அதை ஏற்றுக் கொண்டு அமைதியாக செல்ல வேண்டுமா? அசோக் அவர்களை திருப்பிக் கூட தாக்க வில்லை. காவல்துறை உரிய விசாரணை நடத்தி அவர்களை கைது செய்தது. இந்த ஒரு சம்பவத்தை தவிர அசோக் படு கொலைக்கு வேறு எந்த முகாந்திரமும் இல்லை. தலித் என்றாலே தங்களுக்கு அடங்கித்தான் இருக்க வேண்டும் என்ற சாதி வெறி சக்திகளின் ஆதிக்க மனோபாவம் தான் இந்த படுகொலைக்கு காரணமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, திருநெல்வேலி மாவட்டத்தில் தலித் மக்கள் மீதான வன்கொ டுமை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறு கின்றன. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 463 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் விசாரணையின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளன. அசோக் படுகொலை செய்யப்பட்ட அன்று மாலை 6 மணியிலிருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூட சாதி ஆதிக்க மனோபாவத்திலேயே செயல்படுகிறார்கள். இப்படிப்பட்ட சாதியக் கொலைகளையும், ஆணவக் கொலைகளை யும் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும் இப்படிப்பட்ட படுகொலைக ளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். தடுக்க முன்வர வேண்டும். செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) உயர்நீதி மன்றம் கூட ஆணவப் படுகொலைகளை தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம், ஆணவப் படு கொலைகளை தடுப்பதற்கான பலகட்ட நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவுகள் பிறப்பித்த பின்னரும், தமிழ கத்தில் அதற்குரிய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. உரிய சட்டங்க ளும் நிறைவேற்றப்படவில்லை. தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கும், ஆணவப் படுகொலைகளுக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என ஒதுங்கியிருப்பதே இப்ப டிப்பட்ட படுகொலைகள் நடப்பதற்கு காரணம்.
நாளை கண்டனப் பொதுக்கூட்டம்
ஜூலை 12ஆம் தேதி நெல்லையில் இந்த கொலைச் சம்பவத்தை கண்டித்து பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன் உள்ளிட்ட இடதுசாரி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறி னார். இச்சந்திப்பின் போது மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மனித உரிமை பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.செல்வா, உறுப்பினர்கள் திருமூர்த்தி, ராஜேந்திரன், இரா.முரளி, எஸ்.குமார் ஆகியோர் உடனிருந்தனர்.